

குழித்துறை:
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று 80 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. நேற்று இரவே இந்த பணிமனையில் பஸ்கள் அனைத்தையும் நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8 மணி அளவில் நித்திரவிளை பகுதியை சேர்ந்த வில்சன் என்ற ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் இந்த டெப்போவுக்கு வந்தார். அங்குள்ள பணிமனை அலுவலக 2-வது மாடிக்கு சென்ற அவர் தான் மாடியில் இருந்து குதிக்கப்போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு தான் பணியில் இருந்து ஓய்வுபெற்றதாகவும், தனக்கு ரூ.14 லட்சம் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவேண்டும். பலமுறை இது தொடர்பாக அலுவலகத்திற்கு அலைந்தும் இதுவரை தனக்கு பணம் வழங்கப்படவில்லை, எனவே அந்த பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று அவர் கோஷமிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிற்சங்கத்தினர் அங்கு திரண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த வில்சனை சமாதானப்படுத்தினர். அவரை கீழே இறங்கி வருமாறும் கூறி வலியுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அந்த பணிமனைக்குள் நுழைந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த வில்சனை கீழே இறங்கும்படி கூறினார்கள். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அவரை கைது செய்யும்படி கூறினார்கள்.
இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சங்கத்துக்கு சம்பந்தப்படாத அ.தி.மு.க. நிர்வாகிகள் எப்படி டெப்போவுக்குள் நுழையலாம் என்று கண்டித்து அ.தி.மு.க. நிர்வாகிகளை அங்கிருந்து வெளியே செல்லும்படி கூறினார்கள்.
இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. போலீசார் அவர்களை சமரசப்படுத்தினார்கள். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை உணர்ந்த போலீசார் உடனடியாக அ.தி.மு.க. நிர்வாகிகளை அங்கிருந்து வெளியேற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் மாடிக்கு சென்ற போலீசாரும், தொழிற்சங்கத்தினரும் தற்கொலை மிரட்டல் விடுத்த வில்சனை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர்.
இதற்கிடையில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் பஸ்களை டெப்போவில் இருந்து எடுத்தனர். அவர்களை மற்ற தொழிற்சங்கத்தினர் தடுத்ததால் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. போலீசார் அவர்களை சமரசப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து ஒருசில பஸ்கள் மட்டும் இந்த பணிமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.