

வாலாஜா:
திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டி சேர்ந்தவர் முருகன் ( வயது 38). இவை சென்னை போரூர் முகலிவாக்கத்தில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (28), மகன் புவனேஸ்வர் (4), தன்ஷிகா (1).
நேற்று இரவு முருகன் குடும்பத்துடன் சொந்த ஊரான நார்த்தாம்பூண்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். வாலாஜா சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற பார்சல் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியை உடைத்து எதிர்திசையில் பாய்ந்து சென்றது.
அப்போது முருகன் ஓட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முருகன் இறந்தார். மேலும் படுகாயமடைந்த சரஸ்வதி, புவனேஸ்வர், தன்ஷிகா, ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்சல் வேனை ஓட்டி வந்த திருப்பத்தூரை சேர்ந்த வேலுச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.