

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள மோர்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிக்குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில் கோப்பம்பட்டி பகுதியில் 350 வீடுகள் உள்ளன. 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம்.
கடும் வறட்சியால் கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் 3 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வடமதுரை யூனியன் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்துச் சென்றனர்.
ரெட்டியார்சத்திரம் யூனியன் முருநெல்லிக் கோட்டையைச் சேர்ந்த பொதுமக்களும் குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில் முருநெல்லிக் கோட்டை அரிஜனக் காலனியில் கடந்த 6 மாதமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
போர்வெல்லில் தண்ணீர் இல்லாததால் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் எங்கள் ஊருக்கு வருவதே இல்லை. எனவே இப்பகுதியில் தனி பைப் லைன் அமைத்து காவிரி நீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் தங்கள் கோரிக்கை மனுவையும் கலெக்டரிடம் அளித்தனர். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றனர்.