துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

துறையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சியில் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த பல நாட்களாக காவேரி குடிநீர் முறையாக வரவில்லை. ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரும் கோடையால் வறண்டு போய் விட்டது.

இதனால் இங்குள்ள பெண்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூர முள்ள வயல் வெளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் உப்பிலியபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் துறையூர்- சேலம் நெடுஞ்சாலையில் உப்பிலியபுரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி விட்டனர். இதனால் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com