விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
ராயபுரம்:
செங்குன்றம் அம்பேத்கர் நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த அந்தோணியின் மகன் ஆனந்த் (19). இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ‘லோடுமேன்’ ஆக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் 2 சக்கர வாகனத்தில் சென்றபோது அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதனால் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை செங்குன்றத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
எனவே, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலை ஆபரேசன் மூலம் அவரது இதயம், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் மற்றும் கல்லீரல் அகற்றப்பட்டது.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பொன்னம்பலம் நமசிவாயம் தலைமையில் ஆபரேசன் நடந்தது. அவற்றில் இதயம் மற்றும் ஒரு சிறுநீரகம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது.
எழும்பூரில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு தானமாக பெறப்பட்ட 2 கண்கள் வழங்கப்பட்டன. அவை தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்படும்.

