

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி (வயது 62). அவரது கணவர் முருகசங்கரன் (71). கடந்த 23-ந் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 3 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசியல் போட்டி காரணமாக கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது.
தி.மு.க.வின் ஆதி திராவிடர் குழு மாநில துணைச் செயலாளராக இருக்கும் சீனியம்மாள் தற்போது மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் 7 போலீசார் நேற்று மதுரையில் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
உமா மகேஸ்வரியுடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அரசியல் ஈடுபாடு, அரசியல் முன் விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
ஆனால் போலீசாரின் பல்வேறு கேள்விகளுக்கு சீனியம்மாள் தயக்கமின்றி பதில் அளித்ததாக தெரிய வந்துள்ளது.
சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணை நடத்த வருவதாக கூறிவிட்டு நெல்லை சென்று விட்டனர்.
போலீஸ் விசாரணைக்கு பின்னர் சீனியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மிகவும் அமைதியானவர். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அவருக்கும், எனக்கும் எந்த அரசியல் போட்டிகளும் இருந்தது இல்லை.
கட்சி நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்திருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருடன் நான் சந்தித்து பேசியது இல்லை.
தற்போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.
உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட தகவல் 23-ந் தேதி இரவு 7 மணியளவில் தான் எனக்கு தெரியும். அப்போது கூட நல்ல மனம் படைத்த அவருக்கு இப்படி ஆகி விட்டதே என்று கண் கலங்கினேன்.
ஆனால் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் என்னிடம் விசாரித்தனர். அப்போது, அரசியல் தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் பண பரிமாற்றம் தொடர்பாக கேட்டனர். ஆனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாததால் போலீசாரிடம் உரிய பதிலை கூறி விட்டேன். இந்த கொலை சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
முன்னாள் மேயர் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு அரசியல் ரீதியாக பழி சுமத்த நினைக்கக்கூடாது.
தி.மு.க.வில் நான் பதவியில் இருக்கிறேன். எனவே தி.மு.க. மீது பழி சுமத்துவதற்காக என்னிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.