

தஞ்சாவூர்:
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க கோரி தே.மு.தி.க. சார்பில் சர்க்கரை ஆலைகளை 4-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு இன்று காலை 11.30 மணியளவில் தே.மு.தி.கவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி ஆகியோர் தலைமை தாங்கினர். அவை தலைவர் முருகேசன், தெற்கு மாவட்ட பொருளாளர் ராஜரத்தினம், மாநகர் மாவட்ட பொருளாளர் டி.வி.டி.செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் கைகளில் கரும்புகளை ஏந்தியப்படியும், கட்சி கொடிகளை பிடித்தப்படியும் கோரிக்கைகளை எழுப்பினர்.
கடந்த 2015-16, 2016-17ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக டன்னுக்கு ரூ.450 வழங்காமல் உள்ள தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் குருங்குளம் சர்க்கரை ஆலையை விரிவாக்க பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், வெளிமாநில தொழிலாளர்களை வேலை அமர்த்தக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். #tamilnewsx