தீபாவளி கொண்டாட்டம்: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி புதுவை தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டம்: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து
Published on

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகையையொட்டி புதுவை தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

கவர்னர் கிரண் பேடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாள் என்பது தீமையின் மீது நன்மையும், இருளின் மீது வெளிச்சமும் வெற்றி கொள்வதை குறிப்பதாகும். இத்தீப ஒளி நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் மனங்களிலும், பண்டிகைக்கான உற்சாகமும், வளமும், குறிப்பாக ஏழை, எளியோர் வீடுகளிலும் தவழ வேண்டும்.

அனைவரது வாழ்க்கையிலும் இத்தீபாவளி திருநாள் நல்ல ஆரோக்கியம், செல்வம், கல்வி, புகழ் கிடைக்கச் செய்வதாக அமையட்டும். புதுச்சேரி வாழ் மக்களுக்கு எனது இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை வரிசையாக விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி நரகாசூரனை வதம் செய்த தினத்தை தீபாவளியாக தென்னிந்தியாவிலும், ராமன் ராவணனை அழித்து வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய அன்று மக்கள் வரவேற்றதின் நினைவாக வட இந்தியாவிலும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

தீமையையும் அதர்மத்தையும் அழித்து நன்மையையும் தர்மத்தையும் நிலை நாட்டுவதை அடையாளமாகக்கொண்ட இந்த தீபாவளிப் பண்டிகை தேசம் முழுவதும் ஒரு பண்பாட்டுப் பிணைப்போடு கொண்டாடப்படுகின்ற தேசிய பண்டிகையாகும்.

தீப ஒளியானது இருளை நீக்கி புதிய வெளிச்சத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதைப் போல் தீபாவளிப் பண்டிகையானது வறுமை, கல்லாமை, அறியாமை போன்ற இருள்களை நீக்கி அனைவரது இல்லங்களிலும் வளங்கள், நலன்களை கொண்டு வரட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் நமச்சிவாயம்:- இருள் நீக்கி ஒளி கொடுக்கும் இந்த தீபஒளி திருநாளில் எல்லோர் வாழ்வும் வளமாக அமைய இல்லங்கள் தோறும் செல்வங்கள் பெருக. ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ பகுத் துண்டு கொண்டாடும் பரந்த மனதினை எல்லோருக்கும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை இந்நன்னாளில் நெஞ்சார வேண்டுகிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய திருநாடு ஒளிமயமான ஒப்பற்ற நாடாக திகழவும், தூய்மையான, வளமான, பசுமையான புதுச்சேரியை மக்கள் துணையோடு உருவாக்கவும் தீபஒளி திருநாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் கந்தசாமி:- தீபஒளித்திருநாளாம் தீபாவளியை நாட்டின் அனைத்து இன மத பிராந்திய மக்களுடனும் பகிர்ந்து கொண்டாடுவோம். புதுவை மாநிலத்தில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை பொருளாதார நிலையைக் கருதி நிதியுதவிகளை அரசு உயர்த்தி தந்துள்ளது.

பல்வேறு நலத்திட்டங்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோர் ஆசியுடன் அரசு செயல்படுத்தி வருகிறது. டாக்டர் அப்துல் கலாம் கூற்றின்படி வெற்றியின் ரகசியம் முயற்சி முயற்சி முயற்சி என்பதை மனதில் கொண்டு நம் எதிர்கால வாழ்வு தீபாவளியைப்போல் என்றும் சிறப்பாக அமைய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் ஷாஜகான்:- நமக்குள் இருக்கும் தீய குணங்களை வெளியேற்றி, அன்பு, பாசம், அரவணைப்பு, சகோதர மனப்பாண்மை போன்ற நல்ல நெறிகளோடு வாழ இந்த தீப ஒளித்திருநாளில் நாம் சபதமேற்போம். நல்ல சிந்தனைகள் பூத்திட சமுதாயம் சிறக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த தீபஒளித்திருநாளில் பல வகையான நன்மைகளை அடைந்து வாழ்வில் வளம்காண எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி தீபஒளித்திருநாள் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.

ராதாகிருஷ்ணன் எம்.பி:- இந்திய கலாச்சாரத்தோடு பின்ன பிணைந்த இந்த தீப ஒளி திருநாளில் அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட ஆனந்தமாய் கொண்டாடுவோம். இனிப்பான இந்நன்னாளில் புத்தாடை அணிந்து புத்தொளி பெற்று உள்ளம் உவகை பெற எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

முன்னாள் அமைச்சர் ராஜவேலு:- ஒளிகளின் திருவிழாவாக போற்றப்படும் இந்த தீபாவளி திருநாளை பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறியும், பட்டாசுகள் வெடித்தும் குதூகலமாக கொண்டாடி வரும் இந்த வேளையில் இதே மகிழ்ச்சியும், குதூகலமும் வரும் காலங்களிலும் தொடர்ந்திட மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை வேண்டி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்சி ஆனந்து:- இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அன்புடன் கூடிய ஆதரவு தந்து மக்கள் மகிழ்வுடன் வாழும் திருநாளே தீபாவளி திருநாள். அந்நாள் எந்நாளோ அது பொன்னாளாக அமைய இறைவன் அருள்வேண்டியும் அனைத்து மக்களும் வளமுடனும், நலமுடனும் வாழ இறைவனை வேண்டுவதோடு புதுவை மாநில மக்களுக்கும், உப்பளம் தொகுதி மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பா.ஜனதா சாமிநாதன்:- மக்களை துன்புறுத்தி வந்த சூரன்களை பகவான் அவ தாரம் எடுத்து வதம் செய்ததைப் போன்று பயங்கரவாதிகளாக வலம் வரும் நவீர சூரன்களை வதம் செய்து நமது பாரதத்தை காத்திட நமது பிரதமர் அவர்கள் நரேந்திரனாய் அவதாரம் எடுத்து வந்துள்ளார். எனவே பாரத மக்கள் இனி அச்சம் கொள்ள தேவையில்லை எனக்கூறிக் கொண்டு புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com