திருமங்கலம் அருகே ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அசைவ அன்னதானம்

திருமங்கலம் அருகே பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்ட ஆடுகளை கொண்டு அசைவ அன்னதானம் மதியம் முதல் இரவு வரை நடந்தது.
அசைவ உணவு தயாராகும் பணி நடந்தது
அசைவ உணவு தயாராகும் பணி நடந்தது
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் மொக்கையன் அம்பலம் நகரில் புகழ்பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று இந்த கோவிலில் கிடா வெட்டும் நிகழ்வும் இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தை அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய கிடாக்கள் கோவிலில் வெட்டப்பட்டன. தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்ட ஆடுகளை கொண்டு அசைவ அன்னதானம் மதியம் முதல் இரவு வரை நடந்தது. கோவிலின் ஐதீகப்படி மண் தரையில் அமர்ந்து பக்தர்கள் அசைவ அன்னதானத்தை சாப்பிட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி கோவிலில்சுவாமியை வேண்டிக் கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நேர்த்திக்கடன் நிறைவேறியதும் ஆடுகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டு பவர்களும், நோய் நொடி நீங்க வேண்டுபவர்களும் இந்த அசைவ அன்ன தானத்தை சாப்பிட்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம் என்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அசைவ அன்னதான சாப்பிட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com