காதல் திருமணம் செய்த மனைவியை உருட்டுகட்டையால் அடித்து கொன்ற கணவர்

மதுரையில் காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

மதுரை:

மதுரை சுந்தரராஜபுரம் எல்.எல். ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சித்ராதேவி (வயது29). இவர் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று கொலையான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சித்ரா தேவியை அவரது கணவர் சதீஷ்குமார் உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதற்கிடையே சித்ராதேவியை அடித்துக் கொன்றதாக, சதீஷ்குமார் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறும்போது, நானும் சித்ராதேவியும் காதல் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராதேவி அதே பகுதியில் வசிக்கும் சிலரிடம் சகஜமாக பேசி வந்தார். இதனால் எனக்கு அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை கண்டித்து வந்தேன். இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது எல்லாம் சித்ராதேவி கோபித்துக்கொண்டு அனுப்பானடியில் உள்ள தாய் பார்வதி வீட்டுக்கு செல்வது வழக்கம். பின்னர் நான் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவேன். இதனால் எனக்கு மாமியார் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் நான் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது எனக்கும், சித்ராதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினேன். இதில் சித்ராதேவி இறந்து விட்டார் என்றார். இதனைத் தொடர்ந்து மனைவியை அடித்துக்கொலை செய்த சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com