வில்லியனூரில் அம்மி கல்லை தலையில் போட்டு அண்ணனை கொன்ற தம்பி

வில்லியனூரில் குடிபோதையில் தாயுடன் தகராறு செய்த அண்ணனை அம்மி கல்லை தலையில் போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூரில் அம்மி கல்லை தலையில் போட்டு அண்ணனை கொன்ற தம்பி
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன்கள் அருள்ராஜ் (வயது 21). ஆனந்தரஜ் (21). இருவரும் இரட்டையர்கள்.

அருள்ராஜ் பெயிண்டர் வேலையும், ஆனந்தராஜ் கூலி வேலையும் செய்து வந்தனர். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது.

நேற்று இரவு அருள்ராஜ் மது குடித்து விட்டு வீட்டில் குடிபோதையில் தாய் சுமதியிடம் தகராறு செய்தார். அப்போது இதனை ஆனந்தராஜ் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். பின்னர் ஆனந்தராஜ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

மதுக்கடைக்கு சென்ற ஆனந்தராஜ் அங்கு மது குடித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். அங்கு தூங்கி கொண்டு இருந்த அருள்ராஜை பார்த்ததும் ஆனந்தராஜ் ஆத்திரம் அடைந்தார்.

அண்ணன் என்றும் பாராமல் அருகில் கிடந்த அம்மி கல்லை எடுத்து தூங்கி கொண்டு இருந்த அருள்ராஜின் தலையில் போட்டார். இதில், அருள்ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆனந்தராஜை இன்று காலை கைது செய்தனர்.

அண்ணன் தலையில் அம்மி கல்லை போட்டு தம்பியே கொலை செய்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com