

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் வாலண்டின் மகிலன் (வயது31). இவர் கொசவபட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அந்தோணிலிபியாள் (27) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கடந்த 29-ந் தேதி தனது மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக வாலண்டின் மகிலன் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தோணிலிபியாள் தூக்கு போட்டு தற்கொலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரூரல் டி.எஸ்.பி. வினோத் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் காதர்மைதீன் மற்றும் போலீசார் வாலண்டின் மகிலனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் எனக்கு அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் எனக்கும் என் மனைவிக்கும் தகராறு ஏற்படும். சம்பவத்தன்று போதையில் வந்த என்னை என் மனைவி தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் எங்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
எனது மகளை பக்கத்து வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு மனைவியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினேன். இதில் அவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் நானே என் மனைவியை தூக்கில் மாட்டி தற்கொலை செய்தது போல கூறினேன். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை காட்டி கொடுத்ததால் நான் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.