

திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு அ.வெள்ளோடு, நல்லாம்பட்டி, நரசிங்கம்பட்டி, செம்பட்டி, வடமதுரை, திருமலைக்கேனி, செந்துறை, ராஜக்காபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பூக்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் பூக்கள் சாகுபடி குறைந்தது. இந்த ஆண்டு மழை பெய்துள்ளதால் இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பகுதியில் வாடாமல்லி, செண்டு மல்லி, மல்லிகை, கோழிக்கொண்டை பூக்கள், விளைவிக்கப்படுகிறது. தற்போது பனி அதிகம் இருப்பதால் மல்லிகைப்பூக்கள் மொட்டுகளில் கருகுகிறது. இதனால் அதிக அளவில் பூக்கள் உற்பத்தியாகவில்லை. இதன் காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ ரூ.800, முல்லைப்பூ ரூ.800, கனகாம்பரம் ரூ.700, ஜாதி மல்லி ரூ.600, கக்கராட்டான் பூ ரூ.350, சம்பங்கி ரூ.60, பட்டு ரோஸ் ரூ,60, செவ்வந்தி ரூ.30, வாடாமல்லி ரூ.20, கோழிக்கொண்டை ரூ.10, செண்டு மல்லி ரூ.15 என்று விற்பனையானது.
ஆனால் சிந்தாமணிப் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.5-க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.