

ஈரான் நாட்டில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனராக மஜித் மஜிதி. இவரது கைவண்ணத்தில் உருவான பல படங்கள் உள்நாட்டையும் கடந்து, வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளன.
குறிப்பாக, ’சில்ட்ரன் ஆப் ஹெவன்’ (Children of Heaven), ’தி சாங் ஆப் ஸ்பேரோஸ்’ (The Song of Sparrows) உள்ளிட்ட சில படங்கள் இவரது படைப்பாற்றலை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் முஹம்மது நபியின் வாழ்க்கையை சித்தரித்து சமீபத்தில் இவர் எடுத்த ’முஹம்மது - கடவுளின் தூதர்’ என்ற படம் ஒருதரப்பினரிடையே நல்ல வரவேற்பையும் மற்றொரு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தது.
இதற்கிடையில், இந்தியாவை கதைக்களமாக்கி இந்தியாவிலேயே நடக்கும் சம்பவமாக ஒரு புதிய படத்தை மஜித் மஜிதி இயக்கியுள்ளார். ’பியான்ட் தி கிளவுட்ஸ்’ என்ற இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கப் போவதாக பாலிவுட் வட்டாரத்தில் முன்னர் தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்ப, இந்த படத்துக்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் தீபிகா படுகோனே மஜிதி மஜிதி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியானது.
ஆனால், இஷான் காடர் என்ற புதுமுகத்தை கதாநாயகனாகவும், மாலவிகா மோகனன் என்ற பெண்ணை அவருக்கு ஜோடியாகவும் நடிக்க வைத்து ’பியான்ட் தி கிளவுட்ஸ்’ படத்தை மஜிதி மஜிதி இயக்கி முடித்து விட்டார். இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கதாநாயகன் இஷான் காடர், கதாநாயகி மாலவிகா மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகர்-நடிகையர்களை போடாதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த மஜிதி மஜிதி, ’எனது சில படங்களில் பிரபல நடிகர் நடிகையர்களுடன் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், இந்தப் படத்தின் கதைக்கு புதுமுகங்கள் அவசியமாக தேவைப்பட்டது.
இந்திய திரையுலகில் பிரபலமான முகங்கள் மிகவும் முக்கியம் என்பது எனக்கு தெரியும். எதிர்காலத்தில் இங்குள்ள பிரபலங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தில் தீபிகா படுகோனே நடிக்காதது ஏன்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்த மஜித் மஜிதி, தீபிகா படுகோனேவுக்கு சிறப்பான முறையில் நன்றி தெரிவித்துகொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார்.
நாங்கள் ’பியான்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகோனேவை இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைக்கவில்லை. இந்தப் படத்தை பற்றி அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து அவரை அழைத்திருந்தோம். அவரும் வந்திருந்து, மிகவும் பணிவாகவும், கனிவாகவும் ஒத்துழைத்தார்,