களக்காட்டில் வைரக்கற்கள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது

களக்காட்டில் வைரக்கற்கள் கடத்தலில் ஈடுபட்டு 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
களக்காட்டில் வைரக்கற்கள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது
Published on

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வைரக்கற்கள் உள்ளது. இதை கொள்ளையடித்து செல்ல பலரும் முயற்சி செய்தனர். இதையடுத்து கடந்த 1999-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் களக்காடு மலைப்பகுதியில் உள்ள வைரக்கற்களை திருடிச்செல்ல முயன்றனர். இதையறிந்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் அவர்களுக்குள் கடும் சண்டை ஏற்பட்டது. அப்போது வனத்துறையினர் மீது அந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.

இதையடுத்து வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் நெடுமங்காட்டை சேர்ந்த சுரேந்திரன் (வயது72) என்பவர் வழக்கில் ஆஜராகாமல் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையடுத்து தலைமறைவான சுரேந்திரனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். களக்காடு இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு சுரேந்திரனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று கேரளாவில் பதுங்கி இருந்த சுரேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com