

பல்லடம்:
பல்லடம் வனம் அறக்கட்டளை சார்பில், வான்மழை மாதாந்திர கருத்தரங்கம், அறக்கட்டளை சங்க கட்டடத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி ஏ.கே.ஆர்., குழும தலைவர் ரத்தினர் தலைமை வகித்தார். வனம் அமைப்பு செயலாளர் ஸ்கை சுந்தரராஜன் வரவேற்றார்.
கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார்.
விலங்குகளும், பறவைகளுமே வனங்களை உருவாக்கி சுற்றுச்சூழலை காத்து வருகின்றன. இயற்கையை அழிக்கும் செயல்களை மட்டுமே மனிதர்கள் செய்து வருகின்றனர்.
தண்ணீரின் அருமை தெரியாமல், ஆடம்பரம் என்ற பெயரில் நாம் அதை வீணடித்து வருகிறோம். சுற்றுச்சூழல் குறித்து திட்டமிடுவது மிகவும் அவசியம். அன்று முறையாக திட்டமிட்டதால்தான், அணைகள், ஆறுகள், குளங்கள், மற்றும் பி.ஏ.பி., வாய்க்கால் உள்ளிட்டவை உருவாகியுள்ளன.
இயற்கையே கடவுள் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த இயற்கை குறித்த அருமையை உணராமல், மனிதர்களாகிய நாம் வீணடித்து வருகிறோம். பருவ நிலை மாற்றங்களால், இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது மட்டுமே, அது குறித்து சிந்திக்கிறோம். ஒவ்வொறு தனி மனிதர்களும் இயற்கை வளங்கள், மற்றும் சுற்றுச்சூழல் குறித்து உணர வேண்டும்.
சமீப காலமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதற்கு யார் காரணம்? டெங்கு காய்ச்சல் அக்காலத்திலும் இருந்தது.
குருவிகள், மற்றும் புறாக்கள் டெங்கு புழுக்களையும், தேங்கியிருந்த தண்ணீரையும் உண்டு வாழ்ந்ததால், டெங்கு பரவாமல் இருந்தது.
ஆனால் இன்று தேடிபார்த்தாலும், குருவிகள் கண்களில் படுவதில்லை. பாதிப்புகள் வந்தால் மட்டுமே, நாம் நடவடிக்கையுடன் செயல்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இல்லையெனில், சுற்றுச்சூழல் குறித்து யாரும் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.