திருச்செங்கோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு ரிக் வண்டி அதிபர் பலி

திருச்செங்கோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ரிக் வண்டி அதிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்செங்கோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு ரிக் வண்டி அதிபர் பலி
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). இவருடைய மனைவி அம்சலட்சுமி(35). இவர்களுக்கு தனுஸ்ரீ மற்றும் சம்ரீதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

அதே பகுதியில் செந்தில் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வந்தார். மேலும் விவசாய தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள், மருந்து, மாத்திரைகள் கொடுத்தும், ஊசி மருத்து செலுத்தியும் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் காய்ச்சல் குறைந்தபாடு இல்லை. ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்து வந்தது.

அங்கு சிகிச்சை அளித்த பிறகும் குணமடையாததால் செந்திலை, அவருடைய மனைவி அம்சலட்சுமி (35) மற்றும் உறவினர்கள் ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கும் டாக்டர்கள் செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சல் குணமடைய வில்லை. இதனால் அவருடைய மனைவி மற்றும் மகள்கள், உறவினர்கள் பதட்டம் அடைந்தனர்.

இதையடுத்து கடந்த 13-ந்தேதி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செந்தில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. காய்ச்சல் அவருக்கு தீவிரமாக இருந்ததால் குணப்படுத்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட பிறகும் நேற்று இரவு செந்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே செந்திலுடன் ரிக் வண்டியில் வேலை செய்து வந்த மத்திய பிரதேச பகுதியை சேர்ந்த வாலிபர் ஜோபங்கு என்பவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரும் சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com