

டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பயிற்சிக்காக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி வந்தார்.
கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் தங்கும் ஓட்டல் அறைக்கு செல்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை அழைத்தார்.
பணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணத்தை சுற்றி வலம் வந்தார்.
நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு செல்லாமல் ஆட்டோ டிரைவர் சுற்றி வந்ததால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தோழிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே கும்பகோணம் செட்டி மண்டபம் பை-பாஸ் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு விட்டு ஆட்டோ டிரைவர் சென்று விட்டார்.
அப்போது அந்த பெண்ணை குடிபோதையில் இருந்த 4 வாலிபர்கள் ஓட்டல் அறையில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றனர்.
பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுபற்றி தோழிகளிடம் அந்த பெண் கூறினார். அவர்கள் தனியார் வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். வங்கி அதிகாரிகள் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர்கள் அன்பரசு, தினேஷ், புருஷோத்தமன், வசந்த் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. அந்த இளம்பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றது ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி என்று தெரிந்தது.
ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆட்டோ டிரைவர் தவிர மற்ற 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கும்பகோணத்திற்கு வங்கி பணிக்கு வந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் கும்பகோணம் வக்கீல்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகவில்லை. இதனை அவர்கள் தீர்மானமாகவும் நிறைவேற்றி இருந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி புருஷோத்தமன் சார்பில் தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த வழக்கிற்கும் புருஷோத்தமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று காலை தஞ்சை மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி பரபரப்பான தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் தினேஷ், புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை 7 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கொடுமையான தண்டனை புரிந்த 4 பேரும் தண்டனை காலம் முழுவதும் இயற்கை மரணம் அடையும் வரை சிறையிலேயே அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.