

புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. முதல் இரண்டு மணி நேரத்தில் 4.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. 11 மணி வரை 9.96 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர். ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் மூன்றாவது முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
‘என்னுடைய குடும்பத்தினருடன் இன்று வாக்களித்தேன். என் மகன் முதல் முறையாக வாக்களித்துள்ளார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் பெருமளவில் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். இளைஞர்கள் வாக்களிப்பதால் ஜனநாயகம் வலிமையடையும்.
ஐந்து ஆண்டுகாலம் நாங்கள் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்’ என கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் சுனில் யாதவ், காங்கிரஸ் சார்பில் ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.