

ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், கடந்த மாதம் 26ம் தேதி தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியானதாகவும், 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளில் மேலும், 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடல்களை மீட்கும் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது என தெரிவித்தனர். #Indonesia #MineCollapse