இறந்ததாக கூறப்பட்ட பெண் கண் விழித்த அதிசயம்: 12 மணி நேரத்துக்கு பிறகு இறந்த பரிதாபம்

கேரள மாநிலம் இடுக்கியில் இறந்ததாக கூறப்பட்ட பெண் கண் விழித்து 12 மணி நேர சிகிச்சைப்பிறகு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ரத்தினமாள்
இறந்த ரத்தினமாள்
Published on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பணை வண்டல் மேடு அடுத்த உழவன் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி ரத்தினமாள் (வயது 51). தேயிலை தோட்டத் தொழிலாளி.

இவர் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மஞ்சள் காமாலை தாக்கிய ரத்தினமாளின் ஈரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் 6 மணி நேரமே அவர் உயிரோடு இருக்க வாய்ப்புள்ளது. உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்வது நல்லது என்று டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து ரத்தினமாளை வீட்டுக்கு அழைத்துச்செல்ல உறவினர்கள் முடிவு எடுத்தனர்.

கெடு விதிக்கப்பட்ட நிலையில் ரத்தினமாள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வண்டல்மேடு என்ற இடம் அருகே அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது. வெண்டிலேட்டர் அகற்றிய சில நிமிடத்திலேயே ரத்தினமாளுக்கு மூச்சு நின்றது. இதையடுத்து ரத்தினமாள் இறந்துவிட்டதாக கருதி வீட்டிற்கு எடுத்து சென்று பிரிசர் பாக்சில் உடல் வைக்கப்பட்டது. 3 மணி நேரம் பிரிசர் பாக்சில் இருந்த ரத்தினமாளுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.


இதில் ஒரு உறவினர் பிரிசர் பாக்சுக்கு மிக அருகே சென்று ரத்தினமாளின் முகத்தை பார்த்து கதறி அழுதார். அப்போது ரத்தினமாளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தாடை நடுங்கியது. இதை கண்ட அந்த உறவினர் அலறி சத்தம் போட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். உடனே உறவினர்கள் மின் இணைப்பு துண்டித்து சுவாசிக்க வசதியாக பிரிசர் பாக்சை திறந்து வைத்தனர்.

பின்னர் இது குறித்து வண்டல் மேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கட்டப்பணை அரசு ஆஸ்பத்திரி டி.எம்.ஓ. உடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் பிரிசர் பாக்சில் இருந்து ரத்தினமாளின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரி ரத்தினமாள் உயிரோடு உள்ளார் என்று கூறினார். இதனையடுத்து துக்க வீடு சந்தோ‌ஷ வீடாக மாறியது.

பின்னர் கட்டப்பணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரத்தினமாள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 12 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com