கம்பம் பகுதியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் வியாபாரிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கம்பம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே கம்பம் நகர் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் நகரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் அது கட்டுபடுத்தப்பட்டது.
தற்போது 100 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. பெரும்பாலன பகுதிகளில் விவசாய தொழிலாளர்களே இருப்பதால் அவர்களை எளிதில் ஏமாற்றி இதனை மர்ம கும்பல் மாற்றிச் செல்கின்றனர். இவை அனைத்தும் கேரளாவில் இருந்து இங்கு கொண்டு வந்து புழக்கத்தில் விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
கேரள வியாபாரிகளும் அதிக அளவில் கம்பம் பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். எனவே அவர்கள் மூலமாகவும் கூலித் தொழிலாளர்கள் மூலமாகவும் சமூக விரோதிகள் சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே அதிகாரிகள் கள்ள நோட்டுக்கும் நல்ல நோட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எளிதில் கண்டு கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

