வங்காளதேசம் டாக்கா கபே தாக்குதல்- 7 பேருக்கு மரண தண்டனை

வங்காளதேசத்தில் கடந்த 2016 ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளை போலீசார் இழுத்து செல்லும் காட்சி
குற்றவாளிகளை போலீசார் இழுத்து செல்லும் காட்சி
Published on

டாக்கா:

வங்காளதேச நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல உணவகம் மீது கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்ட 22 பேர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் உயிருடன் பிடிக்கப்பட்டான்.

கடந்த பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, டாக்காவின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், டாக்கா உணவக தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தீர்ப்புக்கு பின் பேசிய அரசு வழக்கறிஞர் கோலம் சர்வார் கான் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டன. நீதிமன்றம் அவர்களுக்கு மிக உயர்ந்த தண்டனையை வழங்கியது’, என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com