திருக்காட்டுப்பள்ளி அருகே காண்டிராக்டரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

திருக்காட்டுப்பள்ளி அருகே காண்டிராக்டரை காரில் கடத்திய மர்ம கும்பல் அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே காண்டிராக்டரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
Published on

பூதலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வடக்குவாடி தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் (வயது 45). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 5-ந்தேதி திருச்சி சென்று கடப்பா கல் வாங்கி கொண்டு வேனில் கல்லணையை அடுத்த கச்சமங்கலம் பிரிவு சாலையில் வந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் கந்தவேல் சென்ற வேனை மறித்து கண்ணில் துணியை கட்டி அவரை கடத்தி சென்றனர்.

அவர்கள் கந்தவேலிடம் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் உங்களையும், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் கந்தவேல் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் தங்களுக்கு ரூ.3 லட்சம் தந்தால் விட்டு விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கும் அவர் உடன்படாததால் அவர்வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து சென்று ரூ.37 ஆயிரம் எடுத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டனர்.

இதுபற்றி போலீசாருக்கு தெரிந்து விட்டால் தங்களை பிடித்து விடுவார்கள் என்று கருதிய கொள்ளையர்கள் கந்த வேலை நேற்று இரவு 11 மணி அளவில் துவாக்குடி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து கந்தவேல் தோகூர் போலீசில் இன்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக திருவையாறு டி.எஸ்.பி. குணசேகரன், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோரும் விசாரணை நடத்தி காண்டிராக்டரை கடத்தி நகை- பணம் பறித்த 4 பேரையும் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் காண்டிராக்டர் கந்த வேலை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் சிக்கினால் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com