

திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளை வழக்கு தொடர்பாக அவ்வப்போது கோர்ட்டில் ஆஜர்படுத்துவது வழக்கம்.
சம்பவத்தன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த அப்பு என்கிற செல்வம் (வயது 25), சத்தியராஜ் (30), நாகப்பட்டினம் மேல்கரையை சேர்ந்த அய்யப்பன் (33) ஆகிய 3 கைதிகளையும் வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவற்காக போலீசார் அழைத்து சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். சிறை வாசலில் கைதிகள் 3 பேரிடமும் சிறைக்காவலர்கள் சோதனை நடத்தினர். பின்னர் அவர்களை சிறைக்குள் உள்ள அறையில் அடைத்தனர். இதனிடையே சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் கைதிகளை அடைத்த அறைக்கு சென்று திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது கைதிகள் 3 பேரிடமும் சிறிய கஞ்சா பொட்டலமும், போதை மாத்திரையும் இருந்தது. உடனே அவற்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயிலர் (பொறுப்பு) ராஜேந்திரன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதிகளுக்கு கஞ்சா, போதை மாத்திரை கிடைத்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.