

நெல்லை:
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பஸ் போக்குவரத்து முழுமையாக பாதித்தது. இதனால் வெளியூர் செல்வோர் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பஸ்களில் பயணம் செய்யும் நிலை உண்டானது.
இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட வெளியிடங்களில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவ்வாறு வருபவர்கள் அரசு பஸ்கள், ரெயில்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களில் புக்கிங் செய்தும் பயணம் செய்தார்கள். அவர்களில் பலரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நெல்லை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து நெல்லை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நாகூர்கனி தலைமையில் அதிகாரிகள் இன்று காலை நெல்லை, பெங்களூரு பகுதிகளில் இருந்து வந்த ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினர். அப்போது 5 பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ் நிர்வாகத்தினரிடம் இருந்து திரும்ப பெற்றனர். பின்னர் அந்த இடத்திலேயே பயணிகளிடம் கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. இதேபோல முறையான கட்டணமே வசூலிக்கவேண்டும் என்று பஸ் நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
பண்டிகை காலங்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அதிகாரிகள் கூறினர். பொங்கல் பண்டிகை முடியும்வரை இந்த சோதனை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews