கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது- ஒரு கிலோ பறிமுதல்

தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது- ஒரு கிலோ பறிமுதல்
Published on

தக்கலை:

குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து போதை பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் போதை கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு களியக்காவிளை பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்கள் குமாரகோவில் சந்திப்பு பகுதியில் வரும் போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக தகவல்களை கூறினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஆதித்யன் (வயது 21) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்த போது, அவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்து தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் வைத்திருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆதித்யன் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

தொடர்ந்து போலீசார் மாணவரிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கியது? யார்-யாருக்கு விற்பனை செய்யப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com