தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 12-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்
Published on

தூத்துக்குடி:

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 12-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய திருவிழா நாளை (10-ந்தேதி), நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் நடக்கிறது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதனால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுதவற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக விழாவுக்கு அழைத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், இறுதி சடங்கு ஊர்வலங்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உரிய அனுமதி பெற்று நடைபெறும் தேர்தல் பிரசாரங்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கூடுதலாக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com