விவசாயிகள் நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு மானியம் பெறலாம்- கலெக்டர் ஆனந்த் தகவல்

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு மானியம் பெறலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆனந்த்
கலெக்டர் ஆனந்த்
Published on

திருவாரூர்:

கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறையுள்ள மாநிலம் என்பதால் கிடைக்கும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்திடவும், குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அளித்து வருகிறது. பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும், நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜீன், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், டீசல் பம்புசெட் மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத தொகை ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமலும் வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத தொகை எக்டேருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமலும் பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்திற்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசனமுறையினை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி கூடுதல் தகவல் பெற்று பயன் பெற்று கொள்ளலாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com