அம்மா நல பெட்டகம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும்- முதலமைச்சர் அறிவிப்பு

கர்ப்பிணி பெண்களுக்கு 12-வது வாரம் மற்றும் 16-வது வாரத்தில் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான அம்மா தாய்-சேய் நலப் பெட்டகம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அம்மா நல பெட்டகம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும்- முதலமைச்சர் அறிவிப்பு
Published on

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சமுத்திரம் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நான் பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே அமைச்சராக இருந்து முதல்-அமைச்சராக உயர்ந்து உள்ளேன். இந்த பகுதியில் சாலை மேம்பாட்டுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிகள் மூலம் வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ரூ. 100 கோடி செலவில் 619 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கான தண்ணீர் தேவை தீர்ந்து உள்ளது. மேலும் குடிநீர் பிரச்சனையும் தீர்ந்து உள்ளது.

2-ம் கட்டமாக குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 331 கோடிஒதுக்கப்பட்டுளளது. மேலும் தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமிக்கவும் நீர்மட்டம் உயரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பகுதியின் தேவையை அறிந்து ஆரம்ப சுகாதார நிலையம் இன்று திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள்.


அம்மா ஆட்சியில் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழைகளுக்கு தேவையான சிகிச்சைகள் சுலபமாக கிடைக்கிறது.

தற்போது இங்கு திறக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் சொந்த கட்டிடம் இங்குள்ள கூட்டுறவு சொசைட்டி அருகே கட்டப்படும்.

விவசாயம், விசைத்தறி, கைத்தறி தொழில் இந்த பகுதியில் பிரதான தொழில் ஆகும். கைத்தறி, விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அவர்களது வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுமாதிரியான திட்டங்கள் எந்த மாநிலத்திலும் கிடையாது. அம்மாவின் அரசான இந்த அரசு ஏழை-எளிய மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக உள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்கனவே ரூ. 18 ஆயிரம் வழங்கி வருகிறது இந்த அரசு. கர்ப்பிணிகளுக்கு 12-வது வாரம் மற்றும் 16-வது வாரத்தில் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான அம்மா தாய்-சேய் நலப் பெட்டகம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கப்படும்.

ஏற்கனவே குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளுக்கு குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் தொடர்ந்து வழங்கப்படும்.

1980-ம் ஆண்டு இந்த தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனேன். நீங்கள் தான் என்னை தேர்வு செய்தீர்கள், அதன்பிறகு எம்.எல்.ஏ., எம்.பி., நெடுஞ்சாலை துறை, மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். தற்போது முதல்- அமைச்சராக செயல்பட்டு வருகிறேன்.

நான் முதல்-அமைச்சராக ஆனபிறகு தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொகுதிக்கு மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் நான்தான் முதல்-அமைச்சர். எனவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது.

நீங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். நீங்கள் கொடுக்கும் மனுக்களை உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்து அந்த மனுக்களுக்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com