கதர் தொழிலுக்கு கை கொடுப்போம், நெசவாளர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வகுக்கிறது” என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்த வேண்டும். அவரது பிறந்தநாளில் மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதரங்காடிகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கி வருகிறது.

தமிழக அரசு, கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்து, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஏழை, எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களுக்கு கை கொடுப்போம் அவர்கள் வாழ்வு சிறக்க ஒளி ஏற்றி உதவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com