சேலத்தில் இருந்து சென்னைக்கு நாளை விமான சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் விமான சேவையை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு நாளை விமான சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் கடந்த 1993-ம் ஆண்டு சுமார் 163 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது.

தொழில் நகரமான சேலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் வியாபாரிகள் வசதிக்காக பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

தனியார் நிறுவனம் தனது சேவையை தொடங்கிய சில மாதங்களிலேயே பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லாததாலும், சேலத்தில் இருந்து கோவை சென்று அங்கிருந்து சென்னை செல்லும் பயணத்திட்டம் வசதியாக இருந்தாலும், அப்போது விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு தரப்பினரின் சீறிய முயற்சியால் 2010-ம் ஆண்டு சேலத்தில் இருந்து விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. அப்போது மற்றொரு நிறுவனம் சேலம்-சென்னை விமான சேவையை மாலை நேரத்தில் தொடங்கியது. இதற்கும் போதிய வரவேற்பு கிடைக்காததால் அந்த நிறுவனத்தின் விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சிறு விமான நிலையங்களில் போக்குவரத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடங்க முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட அளவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து சேலம்-சென்னை இடையே ‘ட்ரூஜெட்‘ விமான நிறுவனம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விமான சேவையை தொடங்க உள்ளது.

சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் காலை 9.20 மணிக்கு சேலம் வந்தடைகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் வருகிறார்கள்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் கலெக்டர் ரோகிணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

அதே வேளையில் சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் பயணிகள் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

பின்னர் காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை புறப்படும் விமானம் சேவையை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து இதே விமானம் கடப்பா வழியாக ஐதராபாத் புறப்பட்டு செல்கிறது.

விமான சேவை தொடக்கத்தை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடம்பத்தை சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இலவச டிக்கெட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்படும் அவர்கள் மறுநாள் விமானம் மூலம் சேலம் வருகின்றனர்.

விமான சேவை மீண்டும் தொடங்குவதையொட்டி சேலம் விமான நிலையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விமான நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை சோதனை செய்யும் கருவிகள், உடமைகளை விமான நிலையத்திற்குள் கொண்டு செல்வதற்கான சிறு தள்ளு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனம் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தினமும் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடையும், சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னையை சென்றடையும் வகையில் பயண நேரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பயண நேரத்தை சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 7.50 மணிக்கு சேலம் வரும் வகையிலும், பின்னர் சேலத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்னை செல்லும் வகையிலும் நேரம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை பரிசீலனை செய்வதாக ட்ரூஜெட் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காமலாபுரம் விமான நிலையத்தில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சங்க தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் மற்றும் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com