குமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடல்

குமரி மாவட்டம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளதையடுத்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட கிணறுகள் மூடப்பட்டதுள்ளது.
மகாதானபுரத்தில் ஆழ்துளை கிணறு மூடப்பட்ட காட்சி
மகாதானபுரத்தில் ஆழ்துளை கிணறு மூடப்பட்ட காட்சி
Published on

கன்னியாகுமரி:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர் இழந்தான்.

சுஜித் வில்சன் இறப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

குமரி மாவட்டத்திலும் இது தொடர்பான ஆய்வுகள் தொடங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் 55 பேரூராட்சிகள், 95 ஊராட்சிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் உள்ளனவா? என்று கணக்கெடுக்க ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நாகர்கோவில் மாநகராட்சியிலும் இது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியும், பொது மக்கள் அளிக்கும் தகவல் மூலமும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஊட்டுவாழ்மடம், கலுங்கடி, பள்ளிவிளை, ராமவர்மபுரம் உள்பட 10 இடங்களில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் உடனடியாக மூடினர்.

இதுபோல கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு பற்றிய தகவல் கிடைத்தது. அதனை பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மூடினர்.

குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளிலும், மேற்கு மாவட்ட பகுதிகளிலும் என இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல வேறு எங்கெங்கு ஆழ்துளை கிணறுகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து அவற்றையும் மூட நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com