நெல்லையில் தொட்டிலில் தூங்கிய குழந்தை மேற்கூரை இடிந்து பலி

நெல்லையில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொட்டிலில் தூங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் தொட்டிலில் தூங்கிய குழந்தை மேற்கூரை இடிந்து பலி
Published on

நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பு ரோட்டில் உள்ள மேலத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவகாமிதேவி. இவர்களுக்கு அருணா அர்ஷிகா என்ற 4 மாத கைக்குழந்தை உள்ளது.

நேற்று இரவு விக்னேஷ்சும் அவரது மனைவி சிவகாமி தேவியும் படுக்கை அறையில் படுத்திருந்தனர். அருகில் தொட்டிலில் குழந்தை அருணா அர்ஷிகா தூங்கி கொண்டு இருந்தது.நெல்லை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததில் இவர்களது வீட்டின் மேற்கூரை தண்ணீரில் நனைந்து பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அதை அவர்கள் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் பலத்த மழை பெய்ததால், மேற்கூரையில் தொட்டில் தொங்கிய இடம் மட்டும் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அப்படியே பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் தொட்டிலில் தூங்கிய குழந்தை கீழே விழ, கட்டி இடிபாடுகள் அந்த குழந்தையின் மேல் விழுந்து மூடியது.

சத்தம் கேட்டு விழித்த விக்னேசும், அவரது மனைவியும் அலறியபடி குழந்தையை மீட்டு உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் குழந்தை அருணா அர்ஷிகா பரிதாபமாக இறந்தது.

சம்பவ இடத்துக்கு தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com