திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 8 மாத குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் இருமலுக்கு சிகிச்சை பெற வந்தபோது 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - குழந்தை லூகேஷ்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - குழந்தை லூகேஷ்
Published on

திருவள்ளூர்:

பள்ளிப்பட்டு அருகே உள்ள நொச்சிலி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி இந்துமதி. இவர்களது 8 மாத குழந்தை லூகேஷ்.

கடந்த சில நாட்களாக குழந்தை லூகேசுக்கு இருமல், சளி இருந்தது. இதையடுத்து நேற்று மதியம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையை உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து குழந்தை லூகேசை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்து உடன் இருந்தனர். அவ்வப்போது டாக்டர்களும், நர்சுகளும் குழந்தையை பரிசோதித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை லூகேசின் உடல்நிலை மோசம் அடைந்தது. அப்போது பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிக்குமாரும், இந்துமதியும் அலறி துடித்தனர். தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. நர்சுகளே சிகிச்சை அளித்ததாக குற்றம்சாட்டினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

இதுகுறித்து லூகேசின் பெற்றோர் சசிக்குமார் - இந்துமதி கூறியதாவது:-

இருமல், சளி பிரச்சினையால் அவதிப்பட்ட மகனை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். சரியான சிகிச்சை அளிக்கவில்லை. நர்சுகளே சிகிச்சை அளித்தனர்.

இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாவிட்டால் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம். இப்போது நாங்கள் மகனை இழந்து விட்டோம்.

பணி நேரத்தில் டாக்டர் இருப்பதில்லை. இதனால் நர்சுகளே பல நேரங்களில் சிகிச்சை அளிக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் உடல் நலம் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் உணர்ந்தால் உடனடியாக சென்னையில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தையை பறிகொடுத்த இந்த தம்பதியின் முதல் குழந்தையும் இதே ஆஸ்பத்திரியில் சிகிச்சையின்போது இறந்து உள்ளது. தற்போது 2-வது குழந்தையையும் இழந்த அவர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com