சிறந்த செயல்பாட்டுக்கான முதல்-அமைச்சர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு

சிறந்த செயல்பாட்டுக்கான முதல்-அமைச்சர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுதந்திர தின விழாவின் போது சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி
Published on

தமிழக நகராட்சி நிர்வாகங்களின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, 3 நகராட்சிகளுக்கு கடந்த 2012-2013-ம் நிதி ஆண்டு முதல், முதல்-அமைச்சர் விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதற்காக தமிழக அரசு ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்கிறது.

இதன்மூலம் சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், சிறந்த 3 நகராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் வீதமும் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது முதல்-அமைச்சரால் இந்த விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளாக தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com