

புதுடெல்லி:
வாக்காளர் அடையாள அட்டையில் பொது மக்களே திருத்தம் செய்யும் வகையில் புதிய ஆன்லைன் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வாக்காளர் அடையாள அட்டையில் பொது மக்கள் தங்கள் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேர்க்கவோ, மாற்றவோ சிரமப்பட்டனர். திருத்தம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தது.
இதனை போக்கும் வகையில் பொது மக்களே வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கூறியிருப்பதாவது:-
‘‘எலக்ட்ரானிக் ரோல்ஸ் சர்வீஸ் நெட்’’ என்ற ஆப் மூலம் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையில் பெயர், முகவரியை பதிவு செய்வது மற்றும் மாற்றம் செய்வதை இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.
இத்திட்டம், தற்போது தேர்தல் முடிந்துள்ள குஜராத், இமாச்சல பிரதேசம் நீங்கலாக 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஜூன் முதல் அமலுக்கு வருகிறது.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மேகாலயா, கர்நாடகா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
வாக்காளர் அட்டையில் மாற்றம் செய்யும் ஒவ்வொரு பதிவும் ஒ.டி.பி. மூலம் வாக்காளர் செல்போனுக்கு தகவல் வரும். மாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டு பழைய விவரங்கள் அழிக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட அடையாள அட்டை வாக்காளர் முகவரிக்கு அனுப்படும்.
இந்த புதிய ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள இந்தியா முழுவதும் 7,500 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இத்திட்டத்தில் மேற்கொள்ளும் அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப முறையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews