சென்னையில் குடிதண்ணீர் கட்டணம் 4 மடங்கு உயருகிறது

சென்னையில் குடிநீர் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட டிஜிட்டல் மீட்டர் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கட்டணம் 4 மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.
சென்னையில் குடிதண்ணீர் கட்டணம் 4 மடங்கு உயருகிறது
Published on

சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் மூலம் 8 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் 6 மாதத்திற்கு ஒருமுறை வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளுக்கு மாதம் ரூ.50 வீதமும், பகுதி வணிக இணைப்புகளுக்கு ரூ.150-ம், முழுவதும் வணிக ரீதிலான இணைப்புகளுக்கு ரூ.200 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அலுவலகங்கள் மூலமாக குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் வணிக ரீதியிலான இணைப்புகளுக்கு குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் குடிநீர் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட டிஜிட்டல் மீட்டர் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் பகுதியாக வணிக குடிநீர் இணைப்புகளுக்கு முதலில் டிஜிட்டல் மீட்டர் பொறுத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் மாதத்திற்குள் 12 ஆயிரம் டிஜிட்டல் மீட்டர்கள் பொறுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டிற்கும் 10 ஆயிரம் புதிய இணைப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வணிக ரீதியான இணைப்புகளுக்கு குடிநீர் எவ்வளவு வினியோகிக்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவீன டிஜிட்டல் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப்படுகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் அனைத்து கட்டிடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் தேவை என கூறப்படுகிறது.

வீடுகளுக்கு இப்போது ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படிப்படியாக இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது வீடுகளுக்கு 4 மடங்கு குடிநீர் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 340 லிட்டர் குடிநீர் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் மீட்டர் திட்டம் நடைமுறைக்கு வந்தால் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் பயன்படுத்த மாதம் ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இத்திட்டம் முதலில் வணிக பயன்பாடு உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக 12 ஆயிரம் டிஜிட்டல் மீட்டர் முதல் கட்டமாக பொறுத்தி செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு சொட்டு குடிநீரும் கணக்கிடப்படும்.

குடிநீரின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வீணாகாமல் தடுப்பதற்காகவும் டிஜிட்டல் மீட்டர் முறை செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் குடிநீர் வாரியத்திற்கு வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

இதன் மூலம் சிறப்பாக சர்வீஸ் செய்ய முடியும். தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படப்படாது. மேலும் டிஜிட்டல் மீட்டர் மூலம் குடிநீர் இணைப்பு திருடப்படுவது தடுக்க முடிவதோடு குழாய்களில் தண்ணீர் கசிவையும் கண்டுபிடிக்க முடியும்.

விடுமுறை காலங்களில் குடும்பத்தோடு வெளியூர் செல்வதாக இருந்தால் குடிநீர் சப்ளையை நிறுத்த ‘வால்வு’ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் அந்த வால்வினை ஆப் செய்து விட்டால் மீட்டர் ஓடாது.

டிஜிட்டல் மீட்டருக்கான கட்டணம் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com