

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நாண்ட்யாலா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வந்தவர் பூமா நாகிரெட்டி. இவர் கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி இறந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கர்னூல் மாவட்டத்தில் உள்ள நாண்ட்யாலா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
’’ஆந்திரப்பிரதேச மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். விவசாயிகள், பெண்கள், வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை. அவர் கலியுக ராட்சசனாக இருந்து வருகிறார்’’ என பேசியுள்ளார். அவரது பேச்சு ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகன்மோகனின் இந்த பேச்சுக்கு தெலுங்கு தேச கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல பகுதிகளில் அவர்மீது போலீசில் புகார் செய்யபட்டுள்ளது. மேலும், பல இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, தெலுங்கு தேச கட்சியின் கிருஷ்ணா மாவட்ட தலைவர் தேவிநேனி அவினாஷ் கூறுகையில், ''முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் துணிவு அவருக்கு எப்படி வந்தது? பரபரப்பாக பேசி அரசியல் செய்வது
வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் எல்லை மீறி பேசிவருகிறார். இப்படி வன்முறை செயலை ஆதரித்து வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப பார்க்கவே முடியவில்லை’’ என தெரிவித்துள்ளார்.