சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
டெல்லியில், சி.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தங்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய காட்சி.
டெல்லியில், சி.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தங்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய காட்சி.
Published on

சென்னை :

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யின் 12-வது வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 10 ஆயிரத்து 673 பள்ளிக்கூடங்களில் இருந்து 10 லட்சத்து 20 ஆயிரத்து 762 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவர்-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவு வெளியிடப்பட்டது.

சி.பி.எஸ்.இ. தேர்வில் டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்‌ஷா கோபால் 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்று உள்ளார். சண்டிகாரை சேர்ந்த பூமி சாவந்த் என்ற மாணவி 497 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடம் பிடித்து இருக்கிறார்.

சண்டிகாரை சேர்ந்த ஆதித்யா ஜெயின், மனட் லுத்ரா ஆகியோர் தலா 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களுக்கு முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வந்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொண்டனர். இந்திய அளவில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 229 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்ச்சி 82.02 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 83.05 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கிறது.

சி.பி.எஸ்.இ தேர்வில் 95.62 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டாமன்-டையூ ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 92.6 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தில் உள்ளது.

டெல்லி மண்டலம் 88.37 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தை பெற்று இருக்கிறது.

சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவிகள் 87.5 சதவீதமும், மாணவர்கள் 78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 82.28 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 81.63 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 79.27 சதவீதமும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், கேந்திர வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், மத்திய திபெத் நிர்வாக பள்ளிகள் 83.57 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் 2,449 பேர் தேர்வு எழுதியதில், 2,123 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.69 சதவீத தேர்ச்சி ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com