ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
Published on

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகள் நுங்கம்பாக்கத்தில் உள்ளன.

இந்த வீடுகளில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். சென்னை தவிர டெல்லி, மும்பை, குருகிராம், நொய்டா உள்பட நாடு முழுவதும் 14 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ப.சிதம்பரத்தின் நுங்கம்பாக்கம் வீட்டில் டெல்லியில் இருந்து வந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 6 மணியில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.

ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தியது. நேற்று இந்த வழக்கில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் பிரபல மும்பை பெண் தொழில் அதிபர் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி இயக்குனர்களாக இருந்தனர். இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் தங்களது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைதான போது, அவர்களிடம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
 
மேலும் அவர்களது வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ. பல கோணங்களில் விசாரணை நடத்தியது.

இதில் 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது இந்திராணி முகர்ஜியின் மீடியா நிறுவனத்திற்கு சாதகமாக அனுமதி அளித்தார் என்றும் இதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் அட்வான்டேஜ் டிரேடிஜிக் கன்சல்டிங் நிறுவனம் வழியாக ரூ.10 லட்சம் பெற்றது என்றும் தெரிய வந்தது.

முதல் தகவல் அறிக்கையில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் பெயர்கள் தவிர கார்த்தி சிதம்பரம், பத்மா விஸ்வநாதன் நடத்தும் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை பல மணி நேரங்களை கடந்தும் நீடித்தது.

சென்னையை தவிர மும்பை, டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள குருகிராம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.

இன்று காலை ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தும் தகவல் கிடைத்ததும் சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நுங்கம்பாக்கத்திற்கு விரைந்து சென்றார்.

ப.சிதம்பரம் வீட்டுக்குள் அவர் செல்ல முயன்றார். ஆனால் அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் திரும்பி சென்றார்.


அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் மத்திய அரசு அவரை களங்கப்படுத்த வேண்டுமென்று இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.

சி.பி.ஐ. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இதன் பின்னணியில் பா.ஜனதா உள்ளது. சி.பி.ஐ. நடவடிக்கையை ப.சிதம்பரம் எதிர்கொள்வார் என்றார்.

ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர். இங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது.

காரைக்குடியை அடுத்த மானகிரியில் சுமார் 90 ஏக்கர் நிலப்பரப்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான பங்களா உள்ளது. சிவகங்கை வரும்போது இந்த வீட்டில் தான் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவது வழக்கம்.

இன்று காலை சென்னையில் சோதனை நடந்த போது காரைக்குடி மானகிரியில் உள்ள வீட்டிலும் சோதனை நடக்கலாம் என்ற தகவல் பரவியது.

இதையடுத்து காங்கிரசார் அங்கு விரைந்தனர். ஆனால் அங்கு காலை 9 மணிவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. வீடும் பூட்டப்பட்டே இருந்தது.

இதேபோல் கண்டனூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் சோதனை நடைபெறவில்லை.

காங்கிரசில் ப.சிதம்பரம் முக்கிய தலைவர்களில் ஒருவராக சோனியா, ராகுலுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மன்மோகன்சிங் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பொறுப்பு வகித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com