

வாலாஜா:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த முருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவரது மனைவி விஜயா (வயது55). அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (53), பிரேமா (40), சாமுண்டீஸ்வரி (45) ஆகியோர் இன்று அதிகாலை மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.
காரை முருக்கம்பட்டை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவர் ஓட்டினார். ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பம் மோட்டூர் என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த விஜயா, ராஜேஸ்வரி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பிரேமா, சாமுண்டீஸ்வரி, கார் டிரைவர் அஜித்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா, ராஜேஸ்வரி பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.