

ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை எட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசபாண்டியன். இவர் ஊத்துக்கோட்டை சத்திவேடு ரோட்டில் பிஸ்கட் கடை நடத்தி வருகிறார்.
சென்னை வண்ணாரபேட்டையில் உள்ள இவரது உறவுக்காரரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக முருகேசபாண்டியன் தன் மனைவி பாக்கியலடசுமி (42), மகள் வைசாலி (17), மகன் மோனீஸ்வர் (12), தாய் தெய்வானை (65), உறவினர் சீனிவாசன் (45) ஆகியோருடன் ஒரு வாடகை காரில் சென்னை வந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை முருகேசபாண்டியன் ஓட்டினார். நள்ளிரவு 1 மணி அளவில் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போடு கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கியவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கதகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி, ஏட்டு கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
காரில் இருந்த முருகேச பாண்டியன், பாக்கியலட்சுமி, மோனீஸ்வர், சீனிவாசன் ஆகியோரை காபாற்றினார்கள். தெய்வானை, வைசாலி ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.