

கோவை:
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்களை கைது செய்ய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாரும், மாநகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சிங்காநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூர் ராமையா காலனியை சேர்ந்த அழகர்சாமி (வயது 49) என்பது தெரிய வந்தது.
இவர் திண்டுக்கல்லில் இருந்து கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து கோவை ஹோப் கல்லூரி, நவ இந்தியா, சிங்காநல்லூர், சித்ரா சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கோவை ஜே.எம்.4 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலக பகுதியில் சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் ½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(வயது 48) என்பதும், கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இவர் கோவையில் யாருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.