பாளையில் அரசு பஸ் மீது கார் மோதல்- 2 வாலிபர்கள் பலி

பாளையில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கிரகப்பிரவேசத்திற்கு பொருள் வாங்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கார் மீது மோதிய அரசு பஸ்.
கார் மீது மோதிய அரசு பஸ்.
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் தணிகாசலமூர்த்தி. இவரது மகன் சோமசுந்தரம் (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ரெட்டியார்பட்டியில் புதியதாக ஒரு வீடு கட்டியுள்ளார். 

அந்த புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேச விழா இன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்திருந்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சோமசுந்தரத்தின் நண்பரான தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியை சேர்ந்த ஜான் ஆபிரகாம் என்பவரது மகன் நேகோமியா என்பவர் வந்திருந்தார். 

இந்நிலையில் விழாவிற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்குவதற்காக இன்று அதிகாலை 3 மணிக்கு  சோமசுந்தரம் மற்றும் நேகோமியா ஆகிய இருவரும் காரில் சென்றனர். காரை நேகோமியா ஓட்டி சென்றார்.

அவர்கள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள சாலையில் வரும்போது ஈரோட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் முன்பகுதி பஸ்சிற்குள் சிக்கி நொறுங்கியது. 

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நேகோமியா மற்றும் சோமசுந்தரம் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய இருவரது  உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து  நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரகப்பிரவேசத்திற்கு பொருட்கள் வாங்க சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com