பல்லடம் அருகே அரசு பஸ்- கார் மோதல்: டிரைவர் பலி

பல்லடம் அருகே அரசு பஸ்சும்- காரும் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
பல்லடம் அருகே அரசு பஸ்- கார் மோதல்: டிரைவர் பலி
Published on

பல்லடம்:

சென்னை திருவொற்றியூர் எஸ்.வி.கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). அவரது தந்தை ராமசாமி (60). இவருடைய உறவினர் பார்த்தசாரதி (42), இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சென்னையில் இருந்து கோவை வந்தனர். காரை பார்த்தசாரதி ஓட்டினார். கார் பல்லடம்- கோவை சாலையில் காரணம்பேட்டை கோடாங்கிபாளையம் பிரிவு அருகே நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் நொறுங்கியது.

அப்போது காரில் இருந்தவர்கள் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்“ என்று அபயக்குரல் எழுப்பினார்கள். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கார் டிரைவர் பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். சீனிவாசன் அவரது தந்தை ராமசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் பயணிகள் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கார் மற்றும் அரசு பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com