நாமக்கல்லில் கட்டிட தொழிலாளி மர்ம மரணம்

கட்டிட தொழிலாளி ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்லில் கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
Published on

நாமக்கல்:

நாமக்கல், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை உடலில் பலத்த காயங்களுடன் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இவர் லுங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

இது பற்றி அப்பகுதி மக்கள் நாமக்கல் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர் உடலை மீட்டனர்.

சம்பவ பகுதி ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் சேலம் ரெயில்வே போலீசாருக்கு இது பற்றி நாமக்கல் டவுன் போலீசார் தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே ரெயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பது குறித்த தகவல் அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். உயிரிழந்தவர் கட்டுமான தொழிலாளி போல் காட்சி அளிப்பதாகவும், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது போல் தெரிகிறது எனவும் அவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

ரெயிலில் அடிப்பட்டு இருந்தால் உடலில் ஏதாவது ஒரு பாகம் துண்டாகி இருக்கும். ஆனால் இந்த வாலிபருக்கு உடலில் எந்த பகுதியும் துண்டாகவில்லை. முகத்திலும், தலையிலும் தான் அடிப்பட்டு இருந்தது.

ரெயில் பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்யும் போது தூக்க கலக்கத்தில் அவர் தவறி விழுந்திருந்தால் கூட தண்டவாளத்தின் வெளியே தான் விழுந்திருப்பார். அல்லது தண்டவாள ஓரத்தில் சிக்கியிருப்பார். ஆனால் அந்த வாலிபர் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் பிணமாக கிடந்தார். எனவே அவர், ரெயிலில் இருந்து தவறி விழ வாய்ப்பில்லை.

மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்துவிட்டு, ரெயிலில் அடிபட்டு இறந்தார் என மறைப்பதற்காக உடலை கொண்டு வந்து தண்டவாளத்தின் நடுவில் போட்டு விட்டு சென்றுள்ளனர் என சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்கள் கூறினர்.

இது பற்றி போலீசார் தெரிவிக்கையில், இறந்து கிடந்த நபருக்கு சுமார் 35 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கும் என தெரிகிறது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவடைந்த பின்னர் தான் முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com