

புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நீண்ட கால முதலீடு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
நிதி மந்திரியின் இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் பங்குச்சந்தை இறக்கத்தை சந்திக்க ஆரம்பித்தது. காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தை பட்ஜெட் உரைக்கு பிறகு சரிவை நோக்கி சென்றது.
இதையடுத்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணில் 1.04 சதவீதமான 375 புள்ளிகள் குறைந்து 35,590 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணில் 1.06 சதவீதமான 117 புள்ளிகள் குறைந்து 10,910 ஆக இருந்தது. இதேபோல், உலோகம், உடல்நலம் உள்ளிட்ட அனைத்து துறை நிறுவன பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்தன.
மேலும், டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், எஸ் பி ஐ, ஒ என் ஜி சி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் 2.58 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. #budget2018, #unionbudget #sensex #tamilnews