பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 7 பவுன் நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் திருட்டு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் முத்துநகர் கிழக்கு முதல் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மருதாம்பாள் (வயது 53). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். அரசு சுகாதாரத்துறை ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனுசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் மருதாம்பாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மருதாம்பாள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து உடனடியாக மருதாம்பாளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டிற்கு வந்த மருதாம்பாள் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 7 பவுன் நகையும், அரை கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.5 ஆயிரமும் திருடு போயிருந்தது. மேலும் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com