

அய்யம்பேட்டை:
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதி கோவில் பாலன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். கூலி தொழிலாளி. இவருடைய மகன் கார்த்தி (வயது 11). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கார்த்தி ரெகுநாதபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விடுமுறையை கொண்டாடி வந்தார். அவரது பாட்டி வீட்டில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் வீட்டின் வெளியே பில்லர் போட்டு தூண் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கார்த்தி வீட்டின் முன் பகுதியில் தூங்கி கொண்டிருந்தான். அப்போது வீட்டின் முன்பகுதியில் கட்டப்பட்ட பில்லர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் கார்த்தி இடுபாடுகளுக்கு இடையே சிக்கி காயமடைந்தார். சத்தம் கேட்டு அவரது பாட்டி வேம்பு மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கார்த்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கார்த்தி பரிதாபமாக இறந்தான்.
தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் ராணி, துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பிராங்கிளின், கிராமநிர்வாக அலுவலர் சுகந்தி மற்றும் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்த சிறுவன் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.